بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا
உங்களுக்கு தடுக்கப்பட்ட பாவங்களில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகினால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை நாம் போக்கிவிடுவோம். இன்னும், உங்களை கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க வைப்போம்.
وَلَا تَتَمَنَّوۡاْ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖۚ لِّلرِّجَالِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبُواْۖ وَلِلنِّسَآءِ نَصِيبٞ مِّمَّا ٱكۡتَسَبۡنَۚ وَسۡـَٔلُواْ ٱللَّهَ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும், அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
وَلِكُلّٖ جَعَلۡنَا مَوَٰلِيَ مِمَّا تَرَكَ ٱلۡوَٰلِدَانِ وَٱلۡأَقۡرَبُونَۚ وَٱلَّذِينَ عَقَدَتۡ أَيۡمَٰنُكُمۡ فَـَٔاتُوهُمۡ نَصِيبَهُمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا
தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை நாம் ஏற்படுத்தினோம். இன்னும், எவர்களுடன் பங்காளி உறவை உங்கள் சத்தியங்கள் மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்து உறுதி செய்தீர்களோ அவர்களுக்கு (உங்கள் சொத்தில்) அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (இந்த சட்டம் பிற்காலத்தில் இறக்கப்பட்ட சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு மாற்றப்பட்டு விட்டது.)
ٱلرِّجَالُ قَوَّـٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ وَبِمَآ أَنفَقُواْ مِنۡ أَمۡوَٰلِهِمۡۚ فَٱلصَّـٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٞ لِّلۡغَيۡبِ بِمَا حَفِظَ ٱللَّهُۚ وَٱلَّـٰتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهۡجُرُوهُنَّ فِي ٱلۡمَضَاجِعِ وَٱضۡرِبُوهُنَّۖ فَإِنۡ أَطَعۡنَكُمۡ فَلَا تَبۡغُواْ عَلَيۡهِنَّ سَبِيلًاۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيّٗا كَبِيرٗا
அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.
وَإِنۡ خِفۡتُمۡ شِقَاقَ بَيۡنِهِمَا فَٱبۡعَثُواْ حَكَمٗا مِّنۡ أَهۡلِهِۦ وَحَكَمٗا مِّنۡ أَهۡلِهَآ إِن يُرِيدَآ إِصۡلَٰحٗا يُوَفِّقِ ٱللَّهُ بَيۡنَهُمَآۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرٗا
அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு நடுவரையும், அவளின் உறவினரில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் (கணவன் மனைவி இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்தி சேர்த்துவைத்து சீர்திருத்தம் செய்வதை) நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் (நடுவர்களின் பேச்சின் மூலம்) அல்லாஹ் ஒற்றுமையை(யும் இணக்கத்தையும்) ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.
۞وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا
இன்னும், அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்; இன்னும், தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் கருணையுடன் உதவி செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِ وَيَكۡتُمُونَ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَأَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ عَذَابٗا مُّهِينٗا
அவர்கள் கருமித்தனம் செய்கிறார்கள்; இன்னும், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள்; இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)தை மறைக்கிறார்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார்படுத்தி இருக்கிறோம்.
وَٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ وَمَن يَكُنِ ٱلشَّيۡطَٰنُ لَهُۥ قَرِينٗا فَسَآءَ قَرِينٗا
இன்னும், அவர்கள் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன் ஆவான்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் மிகக் கெட்ட நண்பனாக இருக்கிறான்.
وَمَاذَا عَلَيۡهِمۡ لَوۡ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَنفَقُواْ مِمَّا رَزَقَهُمُ ٱللَّهُۚ وَكَانَ ٱللَّهُ بِهِمۡ عَلِيمًا
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
إِنَّ ٱللَّهَ لَا يَظۡلِمُ مِثۡقَالَ ذَرَّةٖۖ وَإِن تَكُ حَسَنَةٗ يُضَٰعِفۡهَا وَيُؤۡتِ مِن لَّدُنۡهُ أَجۡرًا عَظِيمٗا
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். இன்னும், (அவர்கள் செய்தது) நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். இன்னும், தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்.